இலங்கையில் மீண்டும் இனவாதத்திற்குத் தூபம் போடப்படும் சம்பவங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 19, 2011

இலங்கையில் அண்மைக்காலங்களாக இனவாதத்துக்குத் தூபம் போடும் சில சம்பவங்கள் இடம் பெற்றுவருவதால் இலங்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பேணப்படுவது குறித்து ஒரு ஐயப்பாடு ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடைபெறவிருந்த வேள்வியில் சிலர் புகுந்து இடையூறு விளைவித்ததுடன் அங்கு வேள்விக்காகவென பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பிராணிகளையும் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தமை இந்து மக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அதேபோன்று அநுராதபுரம் சந்தியில் பல நூறு வருடங்களாக அமைந்திருந்த இஸ்லாமிய மக்களின் புனித சியாரம் அடக்கஸ்தளம் ஒன்றை சில பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த குண்டர் கும்பலொன்று இடித்துத் தகர்த்தியுள்ளது. துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த காரணத்தினாலேயே இந்த அடக்கஸ்தளம் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்துள்ள போதிலும் அவர்கள் இக்கும்பலின் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்[தொகு]