ஈராக் குண்டுத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 25, 2009


ஈராக் தலைநகர் பக்தாத்தின் நடுப்பகுதியில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு நிகழ்வில் பலர் பலியாகியுள்ளதுடன் இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


பக்தாத்தின் அரச உயர் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் தலைமைக் காரியாலயங்கள் கொண்டுள்ள பச்சை வலயம் எனப்படு்ம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ஆகக்குறைந்தது 132 பேர் இறந்துள்ளதாகவும் 180 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஈராக்கின் நீதி அமைச்சின் கட்டிடமும் பிறிதொரு அரச அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.


உள்ளுர் நேரம் காலை 7.30 மணியளவில் இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதை தொடர்ந்து அவ்வப்போது துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரண்டு குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் ஈராக் நீதி அமைச்சின் கட்டிடத்தில் மோதி தாக்குதலை நடத்தியதாகவும் இதை தொடர்ந்து அங்கு பெரும் தீ பரவியதாகவும் உயர் பாதுகாப்பு வலயமான பச்சை வலயத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியதாகவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்போது உள்ள நிலைமையில் காயமடைந்த மற்றும் இறந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


அதிக பாதுகாப்பு கொண்ட இப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ஈராக்கின் பாதுகாப்பு நிலைமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நிகழ்ந்த மிகப்பொரும் தாக்குதல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உடனடியாக இவ் தாக்குதலுக்கு காரணம் யார் என தெரியவராத போதும் வரும் தை மாதம் நடைபெறவுள்ள ஈராக் பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இதை கருதுவதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மூலம்