ஈராக்கில் 40 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக இந்தியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 18, 2014

ஈராக்கில் வன்முறைகள் இடம்பெற்று வரும் மோசுல் நகரில் பணியாற்றிவந்த 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கட்டிடத் தொழிலாளிகளே இவ்வாறு கடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார். இவர்களில் பெரும்பான்மையானோர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், கடத்தியவர்களின் கோரிக்கை எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இது குறித்த மேலதிக தகவலறிய சிறப்புத் தூதுவர் ஒருவர் பாக்தாதுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


ஈராக்கில் கிளர்ச்சியாளர்களினால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நகரான திக்ரித்தின் மருத்துவமனையில் பணி புரிந்து வரும் 46 இந்தியத் தாதிகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் புதிய நிருவாகம் அவர்களுக்குரிய பழைய சம்பள நிலுவையை வழங்க மறுத்து வருவதாக இத்தாதிகள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளனர்.


திக்ரித், மற்றும் மோசுல் நகரங்கள் இசிசிசு என அழைக்கப்படும் சுணி இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் கடந்த வாரம் ஈராக்கிய இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.


ஈராக்கிற்கு தமது குடிமக்களை செல்ல வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது. அங்கிருப்போரையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


மூலம்[தொகு]