உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 31, 2011

இலங்கையில் இடம்பெற்ற ஈழப்போர் நிகழ்வுகளுக்கான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.


நவநீதம் பிள்ளை

ஜெனிவாவில் நேற்றுக் காலை ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை சபையின் 17 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தபின் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து நவநீதம் பிள்ளை உரையாற்றினார்.


'இலங்கையின் உள்ளூர் புலன்விசாரணைகளைக் கண்காணிக்க ஒரு சர்வதேசக் கட்டமைப்பு தேவை மற்றும் தேவையான நடவடிக்கைகளை அந்த சர்வதேச கட்டமைப்பே மேற்கொள்ளலாம்' என்ற பரிந்துரையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளாலும், இலங்கை அரசாங்கப் படைகளாலும் சர்வதேச சட்டங்கள் பரந்துபட்ட அளவில் கடுமையாக மீறப்பட்டதாக முடிவு செய்வதற்கு நம்பகத்தன்மையுடனான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தலைமைச் செயலரின் நிபுணர் குழு அறிக்கை கூறுவதை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன். அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன், என்றும் அவர் குறிப்பிட்டார். 'ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு எதிரொலிக்க வேண்டும் என்றும் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.


ஆனால், ஐநா நிபுணர் குழுவில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அங்கு பேசிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க அங்கு தெரிவித்தார்.

மூலம்

[தொகு]