உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 4, 2010

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள குண்டா கிராமத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.


இந்த ஆசிரமத்தில் இராம் ஜானகி கோயில் உள்ளது. இவை கிருபால் மகராஜ் என்ற தனியாருக்கு சொந்தமானது. கிருபால் மகராஜின் மனைவி நினைவுதினத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், உணவு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆசிரமத்தின் கதவு திடீரென இடிந்து விழுந்ததால் பக்தர்களிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டதாக லக்னெள சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைவர் பிரிஜ்லால் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்தபோது சுமார் 10,000 பக்தர்கள் ஆசிரமத்தில் கூடியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்தவர்கள் பிரதாப்கர் மற்றும் அலகாபாதிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பிரிஜ்லால் தெரிவித்தார்.


கூட்ட நெரிச்சலில் சிக்கியவர்களில் பெரும்பான்மையோர் குழந்தைகளும், பெண்களும் ஆவர்.

மூலம்