உருசியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரகசிய ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 24, 2012

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய ஏவுகணையைச் சோதித்துள்ளதாக உருசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இரகசியமான திட்டமாதலால் இந்த ஏவுகணைக்குப் பெயர் வைக்கப்படவில்லை என அது தெரிவித்தது.


இந்த ஏவுகணை நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை ஊடறுத்துச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளனர். போலியான அணுவாயுத முனையைக் கொண்டு சென்ற இந்த ஏவுகணை நேற்று புதன்கிழமை 10:15 மணியளவில் 6,000 கிமீ சோதனைத் தூரம் செலுத்தப்பட்டது. கம்சாத்கா வட்டாரத்தில் கூரா பகுதியில் இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக்ச் சென்றடைந்ததாக பாதுகாப்பு அமைசுப் பேச்சாளர் கேர்ணல் வதீம் கோவல் தெரிவித்தார். கடந்த செப்டம்பரில் இதே மாதிரியான ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதில் அது தோல்வியில் முடிந்திருந்தது.


நேட்டோ தமது ஏவுகணைத் திட்டம் "இடைக்கால செயற்பாட்டுத் திறமையை" அடைந்துள்ளதாக அறிவித்த நாட்களுக்குப் பின்னர் இந்த இரகசிய உருசிய ஏவுகணைத் திட்டம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.


மூலம்[தொகு]