உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 21, 2011

உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பு வழங்குவதை எதிர்வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. பகவத் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், உருசியாவில் வேற்றுமைகளை விதைப்பதாகவும் கூறி சைபீரியாவில் உள்ள தோம்ஸ்க் நகர நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக உருசியாவில் செயல்படும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த சாது பிரியா தாஸ், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது: இந்த நூல் குறித்து மாஸ்கோவிலும், சென் பீட்டர்ஸ்பர்க்கிலும் உள்ள இந்தியாவின் வரலாறு, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை நன்கு அறிந்த அறிஞர்களிடம் நீதிமன்றம் கருத்துக் கேட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை டிசம்பர் 28-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது என்றார்.


அதேநேரம் 'இந்தியாவின் எதிர் நாட்டில் கூட இப்படி ஒரு எண்ணம் வரவில்லை ஆனால் நமது நட்புறவு நாடான உருசியாவில் தான் இந்து மத புனித நூலான பகவத்கீதைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் கவலை அளிப்பதாகவும், இதற்கு எதிரான தீர்ப்பு எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உருசிய அரசின் பொறுப்பு என்றும் உருசியாவிற்கான இந்தியத் தூதர் அஜய் மல்கோத்ரா அந்நாட்டு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.


இதற்கிடையே, இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டதற்கு, ரஷ்யா, வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சான்டர் கடாகின், புனித நூல்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற நகரில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது விந்தையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]