உருசியாவில் மனநோய் மருத்துவமனையில் தீ, 38 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 26, 2013

உருசியத் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ரமென்ஸ்கி என்ற சிறு நகரம் ஒன்றில் மனநோய் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 38 பேர் கொல்லப்பட்டனர், மூவர் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.


"மருத்துவமனையில் கடமையில் இருந்த தாதி ஒருவர் எரியும் கட்டடத்தில் இருந்து இரண்டு நோயாளிகளை மட்டுமே காப்பாற்றித் தாமும் வெளியேறியுள்ளார்,” எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் இரண்டு மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.


இன்று அதிகாலை 2 மணியளவில் தீப்பரவியதாகவும், நோயாளிகள் பலரும் உறக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். 12 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 முதல் 76 வயதுடைய நோயாளிகள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். 1950களில் கட்டப்பட்ட இந்த ஒரு-மாடிக்கட்டடம் செங்கற்களினாலும், மரத்தினாலும் கட்டப்பட்டதாகும்.


தீப்பற்றியதற்கான காரணம் அறியப்படவில்லையாயினும், நோயாளி ஒருவர் தடையை மீறிப் புகை பிடித்தமையே காரணம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் 55 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வர வேண்டியிருந்தது. மேலும், இப்போது குளிர் காலமாதலால், இடையில் இருந்த ஆற்றின் குறுக்கே சேவையில் இருந்த கப்பல் சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்ததால், மீட்புப் பணியாளர்கள் வரக் காலதாமதம் ஆயிற்று.


2009 ஆம் ஆண்டில் உருசியாவின் கோமி நகரில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 23 பேர் இறந்தனர். 2007 இல் கிராஸ்னதாரில் இல்லம் ஒன்று தீப்பிடித்ததில் 63 பேர் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் மருத்துவமனை ஒன்றில் தீப் பரவியதில் 45 பெண்கள் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]