உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதும் போட்டி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 27, 2010

2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாகக், கல்லூரி மாணவர்களுக்கு விக்கிப்பீடியா 'தகவல் பக்கம்' எழுதும் போட்டி நடத்தப்படவுள்ளது.


இந்தப் போட்டியில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், இயங்குனர் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமைய வேண்டும். இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும். தகவல் பக்கங்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நிறைவு செய்து http://tamilint2010.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரம் அறிய விரும்புவோர், விக்கிப்பீடியாவின் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைப்போட்டி பற்றிய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பல பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் தரவேற்றப்படும்.


இணைய மாநாட்டுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைய மாநாட்டுக் குழுவுக்குக்,​​ கான்பூர் ஐ.ஐ.டி.​ தலைவரான மு.ஆனந்தகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராகக் கனிமொழி எம்.பி.,​​ அமைப்பாளராகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை,​​ ஒருங்கிணைப்பாளராகத் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்[தொகு]