எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 25, 2011

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை தலைநகர் கெய்ரோவில் நடத்துவதற்கு எதிர்ப்பாளர்கள் ஆயத்தம் செய்து வருகின்றனர். 6 ஆவது நாளாக நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாரிர் சதுக்கத்தில் கூடியிருந்தனர். திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 40 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் தேர்தல்களை ஒத்திப் போடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.


30 ஆண்டு காலம் எகிப்தை ஆண்டு வந்த ஒசுனி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர்மட்ட கவுன்சில், ஆறு மாதங்களுக்குள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தல் உட்பட, கவுன்சில் சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல்கள் நடத்தப்பட முன்னர் இராணுவத்தினர் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.


கடந்த 6 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு காவல்துறையினரும், இராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் வீசினார்.


அதே நேரம் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர், இராணுவ உயர்மட்ட கவுன்சிலிடம் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர். இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம், எகிப்தின் பல நகரங்களிலும் தீவிரமடைந்து வருகிறது. கெய்ரோ தவிர அலெக்சாந்திரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இதற்கிடையில், எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவப் பேரவை மன்னிப்புக் கேட்டுள்ளது.


மூலம்[தொகு]