எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 24, 2013

மாஸ்கோவில் உள்ள செரெமெத்தியேவோ விமான நிலையத்தில் தங்கியுள்ள முன்னாள் சிஐஏ முகவரான எட்வர்ட் சினோடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளார் என முன்னர் வந்த செய்தியை சினோடனின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.


உருசியாவுக்குள் நுழைவதற்கான நுழைவாணை அடங்கிய ஆவணங்களை உருசிய நடுவண் குடியகல்வுத்துறை வழங்கியுள்ளதாக முன்னர் செய்தி வெளி வந்திருந்தது. விமான நிலையத்தின் கடப்பு வலயத்திலேயே அவர் தொடர்ந்து தங்கியிருப்பார் என வழக்கறிஞர் அனத்தோலி குச்ச்ரேனா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.


ஆங்காங்கில் இருந்து சூன் 23 ஆம் நாள் விமானம் மூலம் உருசியா வந்தடைந்த சினோடன், உருசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.


அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் சினோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆங்காங்கில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், முகநூல் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் சினோடனைக் கைது செய்யப் பல வழிகளில் முயன்றது.


அரசியல் புகலிடம் தர உலக நாடுகள் பலவும் மறுத்ததை அடுத்து உருசியாவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதியை அவர் அண்மையில் கோரியிருந்தார்.


மூலம்[தொகு]