ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து
கசக்ஸ்தானிலுள்ள பைக்கனோர் ஏவுதளம்

வியாழன், சூலை 30, 2009, ஐக்கிய அரபு அமீரகம்:


ஐக்கிய அரபு அமீரகத்துக்கெனத் தனியாக உருவாக்கப்பட்ட புவி கவனிப்புச் செய்மதியான துபாய்சட்-1 (DubaiSat-1) என்னும் செய்மதி புதன்கிழமை மாலை விண்ணுக்கு ஏவப்பட்டது. உயர் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான அமீரக நிறுவனம் நடைமுறைப்படுத்தும் இத் திட்டம் உருசிய ஏவுகணை மூலம் கசாக்சுத்தானில் உள்ள பைக்கோனர் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இது குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படும்.


அமீரகத்தின் கொடி

புவியிலிருந்து 680 கிமீ உயரத்தில் மணிக்கு 27,000 கிமீ சுற்று வேகத்தில் இயங்கவிருக்கும் துபாய்சட்-1, ஐக்கிய அரபு அமீர்ரகத்தின் செய்மதித் தொழில்நுட்பத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இது நாட்டுக்குத் தேவையான விண்வெளி சார்ந்த தகவல்களையும் புவிக் கவனிப்புத் தகவல்களையும் வழங்கும் எனச் சொல்லப்படுகிறது. இத் தரவுகள், நகர வளர்ச்சி, அறிவியல் ஆய்வு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, கட்டுமானம், நிலப்பட உருவாக்கம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக உயர் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான அமீரக நிறுவனம் அறிவித்துள்ளது. மூடுபனி, மணற்புயல் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கும், நீரின் தரம் பற்றிய ஆய்வு, பொறியியல் சார்ந்த சோதனைகள் போன்றவற்றுக்கு துபாய்சட்-1 இன் தகவல்கள் பெரிதும் பயன்படும் எனத் தெரிகிறது.


முன்னைய திட்டப்படி இது கடந்த சனிக்கிழமையே ஏவப்பட இருந்ததாயினும், மேலதிகமான பாதுகாப்புச் சோதனைகள் செய்யவேண்டி இருந்ததனால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மூலம்[தொகு]