உள்ளடக்கத்துக்குச் செல்

ஐநா உலங்குவானூர்தியை தெற்கு சூடான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது, நால்வர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 22, 2012

தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகளின் உலங்குவானூர்தி ஒன்றை அந்நாட்டு இராணுவத்தினர் நேற்று சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த உருசியர்கள் என நம்பப்படும் நால்வர் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.


இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்திருக்கும் ஐநா செயலர் பான் கி மூன், உலங்குவானூர்தி "மிகத் தெளிவாக" இலச்சினையிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வுக்கான காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை என தெற்கு சூடானின் தகல்துறை அமைச்சர் கூறினார். ஆனாலும், உலங்கு வானூர்தியைத் தாமே சுட்டதாக இராணுவத்தினர் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐநா பேச்சாளர் தெரிவித்தார்.


தெற்கு சூடானின் ஜொங்கிளெய் மாநிலத்தில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு இனக்குழுக்களிடையே அகப்பட்டுள்ள பொது மக்களுக்கு உதவும் பணியை ஐக்கிய நாடுகள் மேற்கொண்டுள்ளது.


உருசியத் தயாரிப்பான எம்ஐ 8 ரக உலங்கு வானூர்தியே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த நால்வரும் உருசியர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தெற்கு சூடானில் போராளிகளுக்கு உதவுவதாக அந்நாடு சூடானைக் குற்றம் சாட்டி வருகிறது. இக்குற்றச்சாட்டை சூடான் மறுத்து வருகிறது. சென்ற ஆண்டு சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது.


மூலம்

[தொகு]