உள்ளடக்கத்துக்குச் செல்

காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 10, 2014

காசா மீது இசுரேல் இன்றும் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த சில நாட்களாக இசுரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் மொத்தம் 80 பேர் வரை இறந்துள்ளார்கள்.


காசாவின் தெற்கே கான் யூனிசு என்ற இடத்தில் வீடு ஒன்றின் மீதும் உணவகம் ஒன்றின் மீதும் இன்று இசுரேலின் குண்டுகள் வந்து வீழ்ந்ததில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இதன் போது 5 பிள்ளைகள், மூன்று பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் போராளிகளும் இசுரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசி வருகின்றனர். கடந்த நள்ளிரவு முதல் தாம் காசாவின் 108 இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்தது. ஹமாசு போராளிகள் 12 ஏவுகணைகள் ஏவியதாகவும் அவற்றில் ஏழை தாம் அழித்து விட்டதாகவும் இசுரேல் கூறியது.


இசுரேல் காசா மீது முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைக்கு "பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், இசுரேல் 40,000 துணைப் படையினரை அவசர இராணுவ சேவைக்கு அழைத்துள்ளது. தரை வழித் தாக்குதல்களையும் இசுரேல் விரைவில் ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காசாவில் நிலைமை "கத்தியின் முனையில் இருப்பது போன்று," என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார். காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுத் அப்பாஸ் இசுரேலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


கடந்த வாரம் இசுரேலிய இளைஞர்கள் மூவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு பாலத்தீன சிறுவன் கடத்தப்படுக் கொல்லப்பட்டான். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நிலைமை தீவிரம் அடைந்தது.


மூலம்

[தொகு]