உள்ளடக்கத்துக்குச் செல்

காபூல் தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 26, 2010

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் வெளிநாட்டவர்கள் மத்தியில் புகழ் பெற்ற உணவகங்களும் தங்கும் விடுதிகளும் நிறைந்த பகுதியில் நடைபெற்றது. இறந்தவர்களில் 9 இந்தியர்களும் 1 பிரெஞ்சுக்காரரும் 1 இத்தாலி நாட்டவரும் ஆவர். குறைந்தது 30 பேர் காயமுற்றார்கள்.


பலமணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 காவலர்களும் 3 தாக்குதல் நடத்தியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.


ஆப்கானில் இந்தியத் தூதரகம் தனது ஊழியர்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ள கட்டடங்கள் மற்றும் அந்நாட்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் தங்கும் இடங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இத்தாக்குதலில் தூதரக ஊழியர்கள் உட்பட 9 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்றும், 12 இந்தியர்கள் காயமடைந்தனர் என்றும் இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.


ஆப்கானிய அரசுத்தலைவர் அமீட் கர்சாய் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். இந்திய அரசும் இதனைக் கண்டித்துள்ளது.


நேட்டோ மற்றும் ஆப்கானியப் படைகள் தாலிபான்களின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இத்தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.


மூலம்

[தொகு]