குழந்தைகளுக்கு பெண்டாவேலண்ட் தடுப்பூசி தமிழகத்திலும் கேரளாவிலும் அறிமுகம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 17, 2011

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பிற்காகப் போடப்படும் 5 தடுப்பூசிகளுக்குப் பதிலாக, ஒரே தடுப்பூசி மூலம் தடுப்பு மருந்து தரும் திட்டம் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப விழா இன்று வேலூரில் உள்ள அலமேலுமங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.


தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை தடுப்பு உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பெண்டாவேலண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தற்போது வழங்கப்பட உள்ளது.


பெண்டாவேலண்ட் தடுப்பூசியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எச்ஐபி தடுப்பூசி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது.


6வது, 10வது, 14வது வாரங்களில் 3 தவணைகளாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து உடன் இந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் இருந்து டிபிடி முதல் தவணை தடுப்பூசி போட தகுதி உள்ள 11.5 மாத குழந்தைகளுக்கு மட்டுமே பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்படும்.


இந்த திட்டத்தின் மூலம் 2011-12ல் 3.60 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். எதிர் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 லட்சம் குழந்தைகளுக்கு 3 தவணைகளாக பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்பட்டு, பயன் பெறுவார்கள்.


மூலம்[தொகு]