குவாண்டானாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு முகாமுக்கு 10 ஆண்டுகள் நிறைவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 12, 2012

கியூபாவின் தென்கிழக்குக் கரையில் உள்ள குவாண்டநாமோ விரிகுடாவில் இருக்கும் அமெரிக்கத் தடுப்பு முகாமுக்கு முதலாவது கைதி ஒருவர் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்தன. இந்த முகாம் திறக்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆரஞ்சு நிறத்தில் உடையணிந்து, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் முதலாவது கைதியின் படங்கள் வெளியாகியிருந்த காலம் முதல் விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றது. அங்குள்ள கைதிகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.


இந்தத் தடுப்பு முகாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாக காலத்தில் அமைக்கப்பட்டது. முகாமுக்கு முதலாவது கைதி 2002 சனவரி 11 இல் கொண்டு வரப்பட்டார்.


கடந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் பதவிக்கு வந்தால் ஒரு ஆண்டுக்குள் அந்த தடுப்பு முகாமை மூடுவேன் என்று ஒபாமா வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனைச்செய்ய தாம் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக அவர் இன்னமும் கூறிவருகின்ற போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டார்கள். மீதமிருக்கின்ற கைதிகளை என்ன செய்வது என்பது குறித்து நடந்துகொண்டிருக்கின்ற பாதுகாப்பு, சட்ட மற்றும் அரசியல் இழுபறிகள் இடம் பெற்று வருகின்றன.


இந்த தடுப்பு முகாமில் மிகவும் அதிகமாக 800 பேர்வரை ஒரே நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அங்கு 170 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.


முகாமின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பன்னாட்டு மன்னிப்பகம் கருத்துக் கூறுகையில், 'மனித உரிமைகள் தொடர்பில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த முன்மாதிரியை இந்த முகாம் ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளது.


மூலம்[தொகு]