கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என வல்லுநர் குழு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 20, 2012

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் ஏழு கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பேரலைகள் வந்தாலும், ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தமிழக அரசின் வல்லுநர் குழு அறிவித்துள்ளது.


நேற்று திருநெல்வேலியில், அரசின் வல்லுநர் குழுவுக்கும், இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வருபவர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தக்கு பின்பே அரச தரப்பினர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.


கூடங்குளம் அணுஉலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நிபுணர் குழுவை அமைத்தார். இந்தக் குழுவினர் நேற்று கூடங்குளத்தில் நேரிடையாக சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நெல்லை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சுமார் 2 மணி நேரம் நடந்தது.


ஆலோசனைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவுடனான பேச்சுவார்த்தை தொடக்கம் தான். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை நிபுணர் குழு நேரிடையாக சந்திக்க வேண்டும். போராட்டக் குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்திக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு தெரிவிப்பதாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு கூறியதாகவும் கூறினார்.


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


மூலம்[தொகு]