கென்யா இனமோதலில் 52 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 23, 2012

கென்யாவின் தென்கிழக்கே இரு இனங்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக கென்யக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கென்யாவின் கரையோர மாகாணத்தின் தானா ஆற்று மாவட்டத்தில் செவ்வாய் மாலையில் ஓர்மா மற்றும் பொக்கோமோ ஆகிய இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. பெண்களும் குழந்தைகளும் கத்திகளால் குத்தப்பட்டு மடிந்தனர். மேலும் பலர் குடிசைகளில் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


கால்நடைகளை மேய்ப்பதற்கான உரிமைப்பிரச்சினையே வன்முறைக்குக் காரணம் என நம்பப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின் படி ஓர்மா இனத்தவர்கள் மீது பொக்கோமோக்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு இனத்தவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் வன்முறைகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் எனவும், ஆனால் இவ்வளவு மோசமாக நடந்ததில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


2001 ஆம் ஆண்டில் இதே பகுதியில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]