கொழும்பில் எதிரணிகளின் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 18, 2012

இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தை ஆட்சேபித்தும், உடன் சம்பள உயர்வைக் கோரியும் எதிர்க்கட்சிகளினால் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைப்பதற்குப் காவல் துறையினர் கண்ணீர்ப் புகை, மற்றும் நீர்ப்பாய்ச்சிகளைப் பிரயோகித்ததோடு ஊர்வலத்தில் ஈடுபட்டோர் மீது குண்டாந்தடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மேல்மாகாண மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இதனால் நேற்று பிற்பகலில் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


தொடருந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்தியில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அரசுத்தலைவர் செயலகப் பக்கத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முற்பட்டனர். இந்த ஊர்வலம் ரெலிகொம் சந்திவரையே பயணிக்க முடிந்தது. அவ்விடத்தில் காவல் துறையினர் அணிதிரண்டு வீதியின் குறுக்காக இரும்புக் கம்பி வேலித் தடைகளைப் போட்டு ஊர்வலத்தை தடுக்க முற்பட்டனர்.


இந்தத் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்னேறிச் செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் சில ஆர்பாட்டக்காரர்கள் காவல் துறையினரை நோக்கித் தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்தினுள் பிரவேசித்தனர். கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடி முன்னேற முயன்றபோது அவர்கள் மீது மீண்டும் பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப்புகைப் பிரயோக செய்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் கூடுதலான அப்பகுதியில் பெரும் கலவர நிலை காணப்பட்டது.


இந்த இழுபறியில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன காயமடைந்து கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


இதேவேளை விலைவாசி உயர்வைக் கண்டித்து ஐக்கிய தேசியக்கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நீர்கொழும்பிலும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. சிலாபத்தில் மீனவர் படுகொலை மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நீர்கொழும்பு நகரில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. மறுபுறமாக நேற்று பிற்பகலில் கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு ஆதரவான பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது.


மூலம்[தொகு]