சதுரங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காசுப்பரோவ்

விக்கிசெய்தி இலிருந்து
காரி காஸ்பரொவ்

வெள்ளி, செப்டம்பர் 25, 2009, ஸ்பெயின்:


எசுபானியாவின் வலென்சியா நகரில் நடந்த சதுரங்கக் காட்சிப் போட்டியில் காரி காசுப்பரொவ், 9-3 என்ற புள்ளிக்கணக்கில் அனத்தோலி கார்ப்போவை வென்றுள்ளார்.


அனத்தோலி கார்ப்பொவ்

கடந்த 22, 23ஆம் தேதிகளில் நடந்த 4 பன்னாட்டு சதுரங்கப் போட்டிகளின் முடிவில் காசுப்பரோவ் 3 புள்ளிகள், கார்போவ் ஒரு புள்ளி பெற்றிருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த 8 போட்டிகளில் காசுப்பரோவ் ஐந்தில் வென்றார், கார்போவ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றார். மீதமுள்ள 2 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்தன.


இதன் காரணமாக மொத்தம் 12 போட்டிகளைக் கொண்ட இந்த காட்சிச் சதுரங்கத் தொடரில் 9-3 என்ற புள்ளிக்கணக்கில் காசுப்பரோவ் வெற்றி பெற்றுள்ளார்.


கடந்த 1984 ம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை சதுரங்கத் தொடர் 5 மாதங்களாக நடந்தது. இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால் வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு அறிவித்தது. இந்தச் சதுரங்கத் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சதுரங்க வெற்றியர் (சாம்பியன்) யார் என்பதை நிறுவ இருவரும் இவ்வாரம் மீண்டும் விளையாடினர்.


இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காசுப்பரொவ் பேசுகையில், “அனைத்துலகத் தர சதுரங்க விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக பன்னாட்டு சதுரங்கப் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]