சரத் பொன்சேக்காவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை விதிக்க அரசுத்தலைவர் ஒப்புதல்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்தெம்பர் 30, 2010

இலங்கையின் முன்னாள் இராணுத தளபதி சரத் பொன்சேக்காவுக்கு 30 மாத கால கடூழியச் சிறைத்தண்டனைக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.


செப்டம்பர் 17 ஆம் நாள் வழங்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த தண்டனை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆயுத கொள்வனவின் போது அவருடைய மருமகன் தனுன திலனரட்னவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.


முன்னதாக முதலாம் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் படி, பொன்சேகாவினுடைய இராணுவப் பதவிகள், பதக்கங்கள் ஆகியன பறிக்கப்பட்டன. இராணுவத்தில் பணியாற்றியபடி அரசியலில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது.


ஆனால் அவர் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருக்கிறார்.


முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க பிபிசி சிங்கள சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது, எனவே அதன் தீர்ப்புகள் அனைத்தையும் நாம் நிராகரிக்கிறோம்,” என்றார்.


இத்தீர்ப்பினால் சரத் பொன்சேக்கா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டி வரும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்