சவுதியில் வறுமையில் தவிக்கும் 400 இந்தியர்கள்

விக்கிசெய்தி இலிருந்து
சவுதி அரேபியா

வியாழன், சூலை 30, 2009, சென்னை:


சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 400 இந்தியர்கள் உண்ண உணவு இன்றி பாலத்துக்கு அடியில் பரிதாபகரமான வாழ்க்கை வாழ்வதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். அவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கனிமொழி ஒரு பிரச்னையை எழுப்பி பேசியதாவது:


சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 400 இந்திய தொழிலாளர்கள் வாழ வழி தெரியாது தவித்து வருகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி கடந்த ஒரு மாதமாக ஒரு பாலத்தின் அடியில் பசியும் பட்டினியுமாக பரிதாபகரமான வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவ அங்குள்ள இந்திய தூதரகம் இதுவரை முன் வரவில்லை. அவர்களுக்கு உதவ இந்திய தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு ஆதரவாக பல உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.


அதைத் தொடர்ந்து அதற்கு பதில் அளித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது, “உறுப்பினர் கனிமொழி எழுப்பிய பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொண்டேன்.


சவுதி அரேபியாலில் தவிக்கும் 400 இந்தியர்களின் நிலை பற்றி என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சவுதியில் உள்ள இந்திய தூதருடன் தொடர்பு கொண்டு அந்த இந்தியர்களின் துயரை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.


மூலம்[தொகு]

  • தினகரன்