சிரியத் தலைநகரில் கிளர்ச்சியாளர்களுடன் இராணுவம் மோதல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 22, 2012

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசு, மற்றும் அலெப்போ ஆகிய நகரங்களில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. தலைநகரின் வட-கிழக்குப் பகுதியான பார்சே மீது உலங்குவானூர்திகள் உதவியுடன் இராணுவத்தின் சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.


அலெப்போ நகரில் மூன்றாவது நாளாக மோதல்கள் தொடர்வதாகவும், இராணுவத் தாங்கிகளின் தாக்குதலால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரண்டு நாட்களுக்கு முன்னர் தமாஸ்கசின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்தே அங்கு புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சென்ற வாரம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் நாட்டின் உயர் அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.


இதற்கிடையில், 2011 மார்ச் மாதம் முதல் சிரியாவில் 19,106 பேர் இறந்துள்ளதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டுள்ள சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையம் அறிவித்துள்ளது. இறந்தவர்களில் 13,296 பேர் கிளர்ச்சியாளர்கள், மற்றும் பொது மக்கள் எனவும், 5,700 பேர் வரையில் இராணுவத்தினர் எனவும் அந்நிலையம் கூறியுள்ளது.


மூலம்[தொகு]