சிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 25, 2013

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சிரியாவின் அலிப்போ நகரின் பழங்கால உமாயத் பள்ளிவாசலின் மினார்ட் எனப்படும் தொழுகைக்கு அழைக்கும் உயரமான கட்டிடம் அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் நடந்த சண்டையில் முழுதாக அழிக்கப்பட்டது. யுனெஸ்கோ 1986ம் ஆண்டு முதல் அலிப்போ நகரம் முழுவதையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.


உமாயத் பள்ளிவாசலின் மினாரெத்

அரசாங்கப்படைகள் 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த உமாயத் பள்ளிவாசலின் தொழுகைக்கு அழைக்கும் உயரமான கட்டிடத்தை அரசு எதிர்ப்புப் படையில் உள்ள அல் கொய்தாவில் அங்கம் வகிக்கும் ஜப்ஆட் அல் நுசரா என்ற குழு வெடிகுண்டு வைத்து அழித்து விட்டதாக குற்றம் சாட்டியது. அரச எதிர்பு படைகள் அரசாங்க கவச வண்டியின் குண்டால் மினார்ட் அழிந்தது என்று கூறுகிறது.


முசுலிம் உலகின் அழகிய பள்ளிவாசல் இது என்று அழைத்த யுனெஸ்கோ இதை பாதுக்குமாறு சிரிய உள்நாட்டு போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் 2012 அக்டோபர் மாதம் கேட்டுக்கொண்டது.


பலமாதங்களாக நடந்த உள் நாட்டுப்போரினால் பள்ளிவாசலின் பெரும் பகுதி கடும் சேதமடைத்துள்ளது. பள்ளிவாசலின் பல அரிய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் முகமது நபி அவர்களின் முடிஉள்ளதாக கருதப்படும் பெட்டியும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்த பழங்கால கையெழுத்தால் ஆன குர்ஆனை பாதுகாத்து அதை மறைவிடத்தில் வைத்துள்ளதாக அரசு எதிர்ப்புப்படைகள் கூறியுள்ளன.


அலிப்போ நகருக்கு அருகிலுள்ள இராணுவ வானூர்தி தளத்தை கைப்பற்ற அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் பல நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இத்தளத்தை அரசாங்கம் இழந்தால் அது பெரியதொரு இழப்பாகும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.


மூலம்[தொகு]