சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை ரூ.50,000 ஆக உயர்த்த ஜெயலலிதா முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 26, 2012

தமிழக அரசு தமிழில் சிறந்த நூல்கள் எழுதுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கும் நிதியுதவியை ரூ.50,000/- ஆக உயர்த்தியுள்ளது.


தமிழக அரசு தமிழில் சிறந்த நூல்கள் எழுதுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.25 ,000 நிதியுதவி வழங்கி வந்தது. இந்தத் தொகை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த ஆணையின் மூலம் ரூ 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


இந்த அரசு திட்டம் மூலம் இது வரை ரூ.25,000 ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மட்டுமே இதுவரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர். சிறந்த இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் அதிக அளவில் வெளிவருவதை மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்; ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு நிதியுதவியாக 50,000/- ரூபாய் அல்லது எழுதுப்பொருள் அச்சகத் துறையின் மதிப்பீட்டுத் தொகையில் 60 விழுக்காடு, இதில் எது குறைவானதோ, அத்தொகை வழங்கப்படும். தமிழக அரசின் மேற்கண்ட அரசின் இந்த அறிவிப்பு மூலம் ஏழ்மையில் உள்ள பல எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுடைய நூல்கள் மென்மேலும் பதிப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


மூலம்[தொகு]