சீனாவில் புதிய இனம் ஒன்றின் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 15, 2012

இதுவரையில் அறியப்படாத மனித இனம் ஒன்றின் எச்சங்கள் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தது ஐந்து பேரின் எலும்புகள் 11,500 முதல் 14,500 ஆண்டுகள் பழைமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.


மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளின் அடையாளத்தை வைத்து இந்த இனத்தை செம்மான் குகை மக்கள் (Red Deer Cave people) என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். சீனாவின் யுணான் மாகாணத்தில் மெங்சி நகருக்கருகில் உள்ள மெலுடொங் என்ற குகைப்பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அயலில் உள்ள குவாங்சி மாகாணத்திலும் சில மனித ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் பற்கள் மற்றும் மண்டை ஓடுகள் ஒரே வகையினதாக இருந்தன. இன்றைய நவீன மனித இனத்துடன் ஒப்பிடுகையில் இவை பெரிதும் மாறுபட்டிருந்தன.


இந்த மனித எச்சங்களின் இனத்தை அடையாளம் காண்பதற்கு இவை விரிவாக மேலும் ஆராயப்பட வேண்டும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. "குறிப்பாக இந்த இனத்தை அடையாளம் காண் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம்," என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்தவர்களில் ஒருவரும், ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான டரென் கர்னோ கூறினார்.


இந்த மனித எச்சங்களின் டிஎன்ஏ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


மூலம்[தொகு]