சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 11, 2012

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவின் வடக்கேயுள்ள ஆச்சே மாநிலக் கடலோரப் பகுதிகளில் இன்று இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து இந்தோனேசியா, தமிழ்நாடு, மற்றும் இலங்கையின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 28-நாடுகளில் கடற்கோள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை, பாண்டிச்சேரி, கடலோர ஆந்திரா ஆகிய பிரதேசங்களை இன்று பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரையான காலத்திற்குள் சுனாமி தாக்கலாம் என எதிர்வு கூறப்பட்டது. சுனாமி எச்சரிக்கைகளை இந்தியா, இலங்கை ஆகியன திரும்பப் பெற்றன. ஆனாலும், மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன.


முதலாவது 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் 33 கிமீ ஆழத்தில் ஆச்சேயின் தலைநகர் பண்டா ஆச்சே நகரில் இருந்து 495 கிமீ தூரத்தில் இடம்பெற்றதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது. ஜகார்த்தா நகரில் ஐந்து நிமிடங்கள் வரை கட்டடங்கள் குலுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில மணி நேரங்களில் 8.3 ரிக்டர் நிலநடுக்கம் பண்டா ஆச்சே நகரில் இருந்து 615 கிமீ தூரத்தில் 16 கிமீ ஆழத்தில் பதிவானது. மேலும் சில அதிர்வுகள் பதிவானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் திருச்சி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், பெங்களூரு மற்றும், இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாலை 4:17 மணிக்கு சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுனாமி இந்தியாவை தாக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் கிழக்கு, மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணரப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான நிலநடுக்கம் உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் பல இடங்களில் மற்றுமொரு நில அதிர்வு ஒரு மணி நேரத்தின் பின்னர் இடம்பெற்றுள்ளது. 8.2 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளது. சுனாமியால் ஏற்பட்ட சேத நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்ல.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]