சென்னையில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 30, 2013

கட்டற்ற தமிழ்த் தகவல் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சென்னையின் அண்ணா பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஞாயிறன்று சிறப்பாக நடந்தேறியது.


தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்களும் ஆர்வலர்களுமாக நூற்றுக்கும் அதிகமானோர் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வையும் அதில் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய ஒன்று கூடலுக்கு முன்பதாக நேற்று முன்தினம் சனிக்கிழமை பங்களிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர்.


இந்திய விக்கிப்பீடியா கிளை மேலாளார் திருமூர்த்தி, கனடா வாட்டர்லு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் செல்வக்குமார், மொழி பெயர்ப்பு குறித்து ஆழிப்பதிப்பகத்தின் சே. ச. செந்தில்நாதன், ஒளிப்படக்கலைக் குறித்து ஹரிபிரசாத், கட்டற்ற மென்பொருள் இயக்கம் குறித்து அருண்குமார் ஆகியோர் பேசினர். தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.


தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி அன்று உருவாக்கி இன்று வரை தொடர்ந்து பங்களித்து வருபவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இ. மயூரநாதன் ஆவார். பத்தாண்டு நிறைவை ஒட்டி அவர் தி இந்து நாளிதழ் செய்தியாளருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "விக்கிப்பீடியாவில் பங்களிப்பது ஒரு விளையாட்டு போன்றது," என்றார். “பயனுள்ள ஒன்றைச் செய்வது மட்டுமல்ல, எமது செயல்பாடுகள் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்டமை மகிழ்ச்சியைத் தருகிறது. விக்கிப்பீடியனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்,” எனக் கூறினார்.


தமிழ் விக்கிபீடியாவின் நிறைவுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு ரூ30000 வழங்கப்பட்டது. முனைவர் துரை.மணிகண்டன், த. வானதி ஆகியோர் எழுதிய “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.


மூலம்[தொகு]