சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்தெம்பர் 13, 2012

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினியில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு பெற துணை செய்யும் வகையிலும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களை அதிகப்படுத்துதல், ஊக்குவித்தல், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களில் பங்குபெறச்செய்தல் என்னும் நோக்கங்களின் அடிப்படையிலும் ஒரு நாள் பயிலரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை தமிழ்நாடு, சேலம் மாவட்டம், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்ந்தது.


பேரா. மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்தல்

ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சண்முகம் இப்பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பாடல் துறைப் பேராசிரியர். பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவத் தொகுத்தல், தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறி பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் போன்றவற்றை செயல்முறையாக விளக்கி மாணாக்கர்கள் உடனுக்குடன் கேட்ட ஐயங்களை விளக்கினார்.


பயிலரங்கின் மதிய அமர்வில் விக்கிப்பீடியர் பார்வதிஸ்ரீ கலந்துகொண்டு, விக்கிப்பீடியா, விக்சனரி மற்றும் பிற விக்கித் திட்டங்களைப் பற்றிய அறிமுகம் செய்தார். மாணவர்களுக்கு விக்கியில் பங்கெடுப்பது பற்றி விளக்கிக் கூறினார். பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பயிலரங்கப் பங்கேற்பாளர்களை அணி அணியாகப்பிரித்து விக்கி தொகுத்தல் பயிற்சியை அளித்தனர்.


இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணாக்கர்கள் 18 பேரும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் 135 பேரும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 12 பேரும் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் 16 பேரும் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் 15-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் விக்கிப்பீடியாவில் புதிய கணக்கினைத் தொடங்கினர்.


இரா. மணிகண்டன், கணினி அறிவியல் துறைத்தலைவரின் நன்றியுரையுடன் பயிலரங்கம் நிறைவடைந்தது. இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்புப் பணிகளை கணினி அறிவியல் துறைத்தலைவர் இரா. மணிகண்டன், தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் அ. அறிவழகன், இணைப் பொறுப்பாளர் சி. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.


மூலம்[தொகு]

  • தமிழகம்.வலை அறிவிப்பு
  • த இந்து, 11.09.2012, பக்:3, கோயம்புத்தூர் பதிப்பு, தமிழ்நாடு. Event Announcement.
  • மாலை மலர், நாள்:12.09.2012, பக்கம் 3, சேலம் பதிப்பு, தமிழ் நாடு,இந்திய ஒன்றியம், ஒளிப்படச் செய்தி.