சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 400 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 30, 2013

சேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், விக்கிப்பீடியா, தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கில் 26.10.2013 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தியது.


பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றி தமிழ்க்கணினியின் தற்காலத் தேவைகளையும் மின்னாளுமையில் தமிழின் பங்கையும் எடுத்துரைத்தார். சேலம் சுழற்சங்கத்தின் தலைவர் ம. கோ. கொ. விஜய குமார், சமூகத்தில் சுழற்சங்கத்தின் பங்கு என்னும் தலைப்பில் உரையாற்றினார், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இணையம் சார்ந்த வேலைவாய்ப்புகள் என்னும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது, விக்கிமீடியா இந்தியப்பிரிவின் நிருவாக மேலாளர் தி. சௌம்யன் இந்தியாவில் விக்கிமீடியா செயற்பாடுகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார், இணைய மற்றும் சமூக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஷ்ணுவர்தன் இந்திய மொழிகளில் கணிமை, என்னும் தலைப்பில் உரையாற்றினார், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, கணித்தமிழ் மற்றும் விக்கிப்பீடியாவின் இன்றியமையாமை என்னும் தலைப்பில் உரையாற்றினார், சேலம் சுழற்சங்க செயலர் த. சௌந்தராஜன் நன்றியுரை ஆற்றினார்.


இரண்டாம் அமர்வில் ‘‘கணிதமிழ் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா’’ குறித்த இணைய வழி நேரிடை செயல் விளக்க படக்காட்சிப் பயிற்சியை, பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளித்தார்.


தகவல் உழவன், க. பழனியப்பன், திருமதி. பார்வதிஸ்ரீ, முனைவர் இ.ரா. குணசீலன், ந. விஜயகுமார், முனைவர் வே. திருக்குமரன், திரு. வ. திருமுருகன் , கோ. நந்த குமார், இரா. சுரேஷ், பெரியார் பல்கலைக்கழக இணைவுப்பெற்ற கல்லூரிகளின் பணியமர்த்தல் மைய அலுவலர்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வாளர்கள் ஆகியோர் தொழிற்நுட்ப உறுதுணை புரிந்தனர்.


இந்நிகழ்வில் விக்கிமீடியா குறித்து விளக்க, கருத்தாளர்கள் தகவல் உழவன் மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர், அலுவலர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார்.