சோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்தெம்பர் 11, 2012

சோமாலியாவில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக நாட்டின் புதிய அரசுத்தலைவராக அசன் சேக் மகுமுது என்பவரை சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர்.


அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் போராளிகள் தற்போது நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். தலைநகர் மொகதிசுவில் அடிக்கடி தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.


இதுவரை பிரதமராக இருந்த அப்திவெலி முகமது அலி முதற்கட்ட வாக்கெடுப்பில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் போட்டியிடவில்லை. சோமாலியாவில் அரசுத்தலைவராக இருந்த சேக் சரீப் சேக் அகமது இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். தேசியத் தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் முறையான ஒரு தேர்தல் நடத்தப்பட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.


58 வயதான அசன் சேக் மகமுது பல தேசிய மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சோமாலி தேசிய பல்கலைக்கழகத்தில் 1981 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் இந்தியாவில் போப்பால் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். யுனிசெப் நிறுவனத்தில் 1995 வரை பணியாற்றியிருந்தார். தலைநகர் மொகதிசுவில் சிமாட் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். 2011 இல் அமைதி மற்றும் அபிவிருத்திக் கட்சியைத் தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார்.


மூலம்[தொகு]