ஜோர்ஜியாவின் முன்னாள் தலைவர் எதுவார்த் செவர்த்நாத்சே காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 7, 2014

ஜோர்ஜியாவின் முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சருமான எதுவார்த் செவர்த்நாத்சே தனது 86வது அகவையில் நீண்ட கால சுகவீனத்தின் பின்னர் இன்று திங்கள் அன்று காலமானார்.


எதுவார்த் செவர்த்நாத்சே

சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஜோர்ஜியா பிரிந்ததை அடுத்து இவர் அந்நாட்டின் அரசுத்தலைவரானார். ஜோர்ஜியாவில் உள்நாட்டுப் போரை இவர் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் நிலைப்புநிலையை ஏற்படுத்தினார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல்களில் குளறுபடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி, ரோஸ் புரட்சி என்ற பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து 2003 நவம்பரில் இவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.


1928 இல் பிறந்த செவர்த்நாத்சே 1946 இல் கம்யூனிஸ்டுக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்தார். 1972 இல் ஜோர்ஜியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவரானார். 1985 இல் சீர்திருத்தத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தானில் சோவியத் படையினரை மீள அழைப்பதற்கும், அதற்குப் பின்னர் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவும் இவர் பெரும் பங்காற்றினார்.


1990 இல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியைத் துறந்த செவர்த்நாத்சே சோவியத் ஒன்றியம் பிளவடைய ஆரம்பித்த வேளையில் 1991 இல் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, ஜோர்ஜியாவின் அரசுத்தலைவரானார்.


இவர் தனது இறுதிக் காலத்தில் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசியில் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டார்.


மூலம்[தொகு]