டாக்கா கட்டட உருக்குலைவு விபத்து: இறந்தோர் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 26, 2013

வங்காளதேசத் தலைநகரான டாக்காவில் அமைந்திருந்த தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்ததை அடுத்து இறந்தோர் எண்ணிக்கை 302 ஐத் தாண்டியது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலான்வர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கும் பணி புரிந்த தொழிலாளர்கள் ஆவர்.


காணாமல் போனோரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களில் இதுவரையில் 40 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்த போது அங்கு 2,000 பேர் வரையில் தங்கியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனோர் 372 பேர்களின் விபரங்கள் இதுவரையில் உறவினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இடிந்து விழுந்த கட்டிடத்தில் எட்டு தொழிற்சாலைகள் இயங்கின. இத் தொழிற்சாலைகள் மேற்குலக பன்னாட்டு நிறுவனங்களுக்கு உடைகள் உட்பட பல பொருட்கள் உற்பத்தி செய்வன. இக்கட்டிடத்தின் குறைபாடுகள் தொடர்பாக அண்மையில் காவல்துறை உரிமையாளருக்கு அறிவுறுத்தி தொழிலாளர்களை வெளியேறுமாறு பணித்திருந்தது. ஆனால் உரிமையாளர் அக் கட்டிடம் உறுதியானது என்று கூறியததைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் தொழிலாளர்களை தொடர்ந்து பணி புரிய கட்டுப்படுத்தி உள்ளன.


மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிக ஆபத்தான சூழ்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை இயக்குவது, அல்லது அவற்றை பயன்படுத்துவது கடந்த பல ஆண்டுகளாக கண்டனத்துக்கு உள்ளான ஒரு செயற்பாடாக இருந்து வருகிறது. கடந்த நவம்பரில் இதே போன்ற ஒரு இன்னுமொரு உடைத் தொழிற்சாலை தீ பற்றி எரிந்ததில் 117 பேர் இறந்தனர். அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெளியேறாதவாறு பூட்டப்பட்டு இருந்தது. 2005 இருந்து இந்த மாதிரியான விபத்துக்களில் குறைந்தது 700 பேர் வங்காளதேசத்தில் இறந்துள்ளார்கள்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]