டிசம்பர் இசை விழா 2013: சென்னையின் இசை மன்றங்கள் தயாராகி வருகின்றன

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 23, 2013

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடப்பு ஆண்டிற்குரிய இசை விழாவினை நடத்திட சென்னையின் இசை மன்றங்கள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க சென்னையின் இசை மன்றங்களால் நடத்தப்படும் கருநாடக இசைக் கச்சேரிகள், இந்த ஆண்டும் வழக்கம்போல களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இசை மன்றங்கள் தமது இணையத்தளத்தில் இவ்வாண்டிற்குரிய நிகழ்ச்சி நிரல்களை பதிப்பிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் தமது மன்றம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதுகள் குறித்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சில அமைப்புகள், அறிவிப்பு ஒட்டிகளை நகரத்துச் சுவர்களிலும் பேருந்துகளிலும் ஒட்டி தமது நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரத்தை ஆரம்பித்துள்ளன.


மியூசிக் அகாதெமியின் 87 ஆவது இசை மாநாடு மற்றும் இசை விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 15, 2013 முதல் சனவரி 1, 2014 வரை நடைபெறுகின்றன. இந்தக் கலை மன்றத்துக்குச் சொந்தமான டி. டி. கிருஷ்ணமாச்சாரி அரங்கத்தில் டிசம்பர் 15 அன்று துவக்க விழா நடைபெறுகிறது. இந்தியத் தலைமை நீதிபதி ப. சதாசிவம் துவக்கிவைக்க இருக்கும் இவ்விழாவிற்கு கருநாடக இசைப் பாடகர் சுதா ரகுநாதன் தலைமை வகிக்க இருக்கிறார். மியூசிக் அகாதெமியின் 2013 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதினை சனவரி 1, 2014 அன்று சுதா ரகுநாதன் பெறவிருக்கிறார்.


தமிழ் இசைச் சங்கம் இன்னமும் தனது நிகழ்ச்சி நிரலை தனது இணையத்தளத்தில் வெளியிடவில்லை. பொதுவாக இச்சங்கத்தின் நிகழ்ச்சிகள், டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஆரம்பமாகும். இவ்வாண்டிற்குரிய இசைப்பேரறிஞர் விருது யாருக்கு வழங்கப்படவிருக்கிறது என்பது குறித்தும் இதுகாறும் தகவல் இல்லை.


இலக்சுமண் சுருதி நடத்தும் 9 ஆவது சென்னையில் திருவையாறு இசை விழா, டிசம்பர் 18 முதல் டிசம்பர் 25 வரை நடைபெறுகின்றன. எட்டு நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு சமய சொற்பொழிவுகளும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.


மூலம்[தொகு]