தடுப்பில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 16, 2014

இலங்கையின் கடல் எல்லையினும் மீன் பிடித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதென்று முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். இலங்கை சிறைச்சாலைகளில் சுமார் 236 இந்திய மீனவர்களும் அவர்களின் 90 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இதே போன்று தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 129 இலங்கை மீனவர்களும் அவர்களது 34 படகுகளும் அங்கிருந்து விடுவித்து இலங்கை அனுப்பப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்னிந்திய மீன்பிடிப்படகு

இலங்கை இந்திய எல்லைப் புறங்களில் இந்திய மீனவர்களின் பிரைச்சனை தொடர்பாக கலந்துரையாடல் நடத்த இந்தியா சென்றிருந்த வேளையிலேயே இந்த அறிவித்தலை ராஜித சேனாரத்ன விடுத்துள்ளார். மேலும் சென்னையில் இரு நாட்டு மீனவர்களும் வரும் 20ம் திகதி சந்தித்து கலந்தாலோசிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இதனிடையே நேற்று இலங்கை மீன்பிடி அமைச்சரை இந்திய மீனவர்கள் சந்திப்பதாக ஆரம்பத்தில் திட்டம் இருந்தாலும் இறுதியில் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.


இதேவேளையில் இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு இந்தப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தையில் 2004ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அனுபவமிக்க ஆளுமைகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேலும் தென் இலங்கை மீனவர்களை மீட்கவே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த இலங்கை மீன்பிடி அமைச்சர் இணங்கியுள்ளாரோ என்றும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளில் வந்து இலங்கைக் கடல் வளத்தைச் சுரண்டிக்கொண்டு சென்றுவிடுவதாக அவர்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.


மூலம்[தொகு]