தமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
ஞாயிறு, மே 15, 2011
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே. மு. தி. க. 27 தொகுதிகளை வென்று இரண்டாவது பெரும் கட்சியாகத் தோற்றம் பெற்றுள்ளது.
முன்னாள் ஆளும் கட்சியான தி. மு. க. இம்முறை தேர்தலில் 21 தொகுதிகளை மாத்திரமே பிடித்திருக்கும் நிலையில், தே.மு.தி.க. போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தே. மு. தி. க சார்பில் போட்டியிட்டு வென்ற பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதன் மூலம் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தே. மு. தி. க, பிரதிநிதிகளின் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது கட்சி பிரதிநிதிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். சட்டசபை தேர்தலில் சாதி அடிப்படையில் செயல்படும் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த், தினமலர், மே 14, 2011
- 'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு தட்ஸ் தமிழ், மே 14, 2011