தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 16, 2011

தமிழ்நாட்டின் 16வது முதல்வராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.


சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர். ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகிறார். முன்பு 1991 முதல் 1996 வரையிலும், பின்னர் 2001 முதல் 2006 வரையிலும் முதல்வராக பதவி வகித்துள்ளார்.


ஜெயலலிதாவைத் தொடர்ந்து ‌நி‌தி‌த்துறை அமை‌ச்ச‌ராக ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம் உ‌ட்பட 33 பே‌ர் அமை‌ச்ச‌ர்க‌ளாக பத‌‌வியே‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.


சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பதவியேற்புக்குப் பின்னர் இன்று மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மூலம்[தொகு]