தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை - தமிழகக் காவல்துறை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 12, 2011

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளமைக்கு தமிழகக் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்த பிரதமர் டி.எம். ஜயரத்ன. அந்த விடுதலைப்புலிகள் முகாம்கள் குறித்த கருத்து தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு வன்மையாக மறுத்திருந்தது. தமிழகக் காவல் துறையும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.


தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் புதன் கிழமையன்று தெரிவித்திருந்தார். இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாக ஜயரத்ன குற்றம்சாட்டியிருந்தார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து இலங்கையும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதில் இந்திய அரசாங்கத்துக்கு சம்பந்தமிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டவில்லை.


அவரது புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இல்லையென இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதே நேரம் முகாம் தொடர்பிலேயே விவாதம். இங்கு முகாமை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு விடுதலைப் புலிகள் உள்ளனர். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. இந்தியப் புலனாய்வுத் துறையே கூறுகின்றது என வீடமைப்பு மற்றும் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர்கள் சந்திப்பிப்பொன்றில் கூறியுள்ளார்.


மூலம்[தொகு]