தர்மபுரி பஸ் எரிப்பு தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்ரவரி 16, 2007

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலர், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)

ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு முழுவிவரம்

கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இது தவிர சொத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.

(ஆக மொத்தம் மரணதண்டனையோடு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் 59 ஆயிரம் அபராதமும்)

டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத்துடன் சட்டவிரோத கும்பலுடன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய தொடுப்புகள்:[தொகு]

  • சிந்தாநதி [1]