தாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் கையளித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 31, 2012

இசுரேலில் இடம்பெற்ற தாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் பாலத்தீனிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகளும், போராளிகளுமாக 1975 ஆம் ஆண்டு முதல் இறந்தவர்களின் உடல்கள் இவர்களில் அடங்கும்.


கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இசுரேலிய சிறைச்சாலைகளில் கைதிகளாகவுள்ள நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் பகுதியாகவே இந்தக் கையளிப்பு இடம்பெற்றது.


இந்த 91 உடல்களில் 79 ரமல்லா நகருக்கும், ஏனைய 12 உடல்களும் காசாவுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடல்கள் மீள அடக்கம் செய்யப்படும் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.


காசாவில் அடக்கம் செய்யப்படுபவர்களுக்கு சிறப்பு இராணுவ மரியாதை அளிக்க ஹமாஸ் இயக்கம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு உடலுக்கும் 21 முறை மரியாதை வேட்டுகள் தீர்க்கப்படும். கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் பாலத்தீனத்தில் மாவீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.


மேற்குக் கரையில் இசுரேல் அமைத்து வரும் குடியிருப்புகளை நிறுத்த இசுரேல் மறுத்ததை அடுத்து 2010 ஆண்டு டிசம்பரில் பாலத்தீனத்திற்கும் இசுரேலுக்கும் இடையில் இடம்பெற்று வந்த நேரடி அமைதிப் பேச்சுகள் தடைப்பட்டிருந்தன.


மூலம்[தொகு]