தானே புயல் புதுவையில் கரையைக் கடந்ததில் பலத்த சேதம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 30, 2011

புதுச்சேரி - கடலூர் இடையே தானே புயல் இன்று காலையில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், புதுச்சேரியிலும், கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவையில் இருவரும், தமிழ்நாட்டில் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தானே புயலின் பாதை

புதுவை நகரின் அனைத்து் சாலைகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் பெயர்ந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 15 சமீ மழை பெய்துள்ளது.


ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.


சென்னை-புதுவை-கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


விழுப்பரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மரம் விழுந்து ஒருவர் அங்கு இறந்துள்ளார்.


தானே புயல் என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் திசம்பர் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதுடன் அது மெல்ல மெல்ல வலுவடைந்து திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியிருந்தது.


மூலம்[தொகு]