திருகோணமலை, குச்சவெளியில் நிலவெடிப்பு, மக்கள் அச்சம்

விக்கிசெய்தி இலிருந்து
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடம்

திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், சனவரி 24, 2011

இலங்கை திருகோணமலை, குச்சவெளியில் நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள், மற்றும் புதைகுழிகளும் தோன்றியுள்ளன. இதனை அடுத்து அவ்வூர் மக்களிடம் பதட்டம் காணப்படுகிறது.


இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் விரிவான அடிப்படையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் ஆகியன இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழு ஒன்று கொழும்பில் இருந்து குச்சவெளிக்கு அனுப்பபட்டுள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன் தினம் குச்சவெளி கலப்பையாறு சுனாமி வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் உள்ள களப்புப் பகுதியில் இரண்டு சிறுமிகள் வயல்வெளியோரமாக நடந்து செல்கையில் ஒரு சிறுமியின் இரண்டு கால்களும் நிலத்தில் புதையுண்டு போனது. அடுத்த சிறுமி கால்கள் புதையுண்ட சிறுமியை இழுத்துக் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து இவ்விடயம் அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற களி மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது.


நிலக் கீழ் நீர்மட்டம் உயர்தல் மற்றும் சதுப்பு நிலத்தின் கீழ் இயற்கை வாயு உற்பத்தியாகி அழுத்தம் ஏற்படுதல் போன்றவற்றாலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த நிலையில், மற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா இது என்ற கேள்வியுடன் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்[தொகு]