தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 9, 2013

இந்தியாவின் வடக்கே நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஊழலுக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக போட்டியிட்டு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி தோற்றுள்ளது. முதலமைச்சராக இருந்த சீலா தீக்சித்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேச்றிவால் தோற்கடித்தும் உள்ளார். மொத்தம் உள்ள 70 இடங்களில் 17 இடங்களை இக்கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்தச் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 32 இடங்களுடன் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ள கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களை அக்கட்சியால் வெல்ல முடியவில்லை.


ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு அன்னா அசாரே வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதே சமயம் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டாம் எனவும், அது ஊழலுக்கே வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தனிப் பெரும்பான்மை இல்லை எனில் மற்றுமொரு தேர்தலை சந்திப்பதே நல்லது என்றார்.


ஆம் ஆத்மியின் இந்த வெற்றி நாட்டின் பிற பகுதிகளில் குறிப்பாக இளைஞர்கள், நடுத்தரக் குடுபத்தவர் மத்தியில் எதிரொலிக்கும் எனவும். நாடாளமன்ற தேர்தலில் பிற கட்சிகளுக்கு இது பெரும் சவாலாய் அமையலாம் எனவும், 30 தொகுதிகள் வரை கைப்பற்றி முக்கியமான கட்சியாய் உருவெடுக்க கூடும் என அரசியல் ஆய்வாளர் சுவாமிநாதன் ஐயர் கூறுகின்றார்.


ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான பொது மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என பரவலாக கருதப்படுகின்றது.


மூலம்[தொகு]