துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 14, 2014

துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 205 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என்றும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.


வெடி விபத்து சமயத்தில் 787 பேர் சுரங்கத்தில் இருந்ததாக அமைச்சர் கூறினார். மானிசா மாகாணத்தின் சோமா நகரிலுள்ள இச்சுரங்க விபத்து மின்சாரக் கோளாறால் நடந்ததாகத் தெரிகிறது. மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணிபுரிந்து சுரங்கத்தில் சிக்கிய நூறுக்கு மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் சுரங்கத்தில் சுரங்க நுழைவாயிலில் இருந்து 4 கிமீ தூரத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்.


தலைநகரான அங்காராவில் இருந்து இச்சுரங்கம் 450 கிமீ தொலைவில் உள்ளது. தொழிலாளிகளின் உறவினர்கள் தனியாருக்கு உரிமையான இச்சுரங்கத்துக்கு அருகில் கூடியுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்தின் உள்ளே 360 தொழிலாளிகள் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.


கார்பன் மோனாக்சைடு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் தப்பி பிழைத்துள்ளோரை காப்பாற்ற ஆக்சிசன் உள்ளே செலுத்தப்படுவதாகவும் கூறினார்.


செவ்வாய்கிழமை நண்பகல் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அவசர காலப் பணியாளர்கள் சுரங்கத்தை விரைவில் அடைய உதவுகின்றனர்.


இவ்விபத்தால் துருக்கியப் பிரதமர் அல்பேனியாவுக்கு செல்லும் தன் திட்டத்தை ஒத்திவைத்து சுரங்கம் உள்ள சோமா பகுதிக்கு விரைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


சுரங்க முதலாளி இவ்விபத்து பற்றி விசாரணை நடப்பதாக தெரிவித்தார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இவ்வாறு நடந்துள்ளது எனக் கூறினார்.


லிக்னைட் நிலக்கரியை வெட்டி எடுப்பது சோமா பகுதியில் பெரும் தொழிலாகும். இந்நிலக்கரி அருகிலுள்ள மின் உற்பத்தி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஆய்வாளர்கள் துருக்கியின் சுரங்கக் காப்பு மற்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும் போது பின்தங்கி உள்ளது என்கின்றனர்.


1992இல் கருங்கடல் பகுதியிலுள்ள சுரங்க விபத்தில் 270 பலியானதே துருக்கியின் மோசமான சுரங்க விபத்தாகும்.


மூலம்[தொகு]