துருக்கியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 12, 2013

துருக்கியில் அரசிற்கெதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான கேஜி பூங்காவை இடித்துவிடுமாறு அந்நாட்டுப் பிரதமர் ரிசெப் தய்யிப் எர்டோகன் உத்தரவிட்டார். இந்த இடம் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் துவங்கும் பாரம்பரிய இடமாக இருந்து வருகிறது. இதனால், இப்பூங்காவை தரைமட்டமாக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 31ம் தேதி முதல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். சாதாரண எதிர்ப்பாக துவங்கிய இப்போராட்டம் அரசின் அடக்குமுறையால் வன்முறையாக வெடித்தது.


இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து எர்டோகன் விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பின்னர் இப்போராட்டம் நாடு முழுவதும் வெடித்தன. இந்நிலையில், செவ்வாயன்று இஸ்தான்புல் நகரில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, போராட்டக்குழுவின் தலைவர்களுடன் புதனன்று பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.


கடந்த ஜூன் 8ம் தேதி துருக்கியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான தேசிய இயக்கக் கட்சியின் தலைவர் தெவ்லெத் பஹ்சேலி வலியுறுத்தினார். துருக்கியில் போராடி வரும் மக்கள் மீது அந்நாட்டு அரசு கையாண்டு வரும் அடக்குமுறைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


மூலம்[தொகு]