உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 10, 2011

நேற்றுப் புதன்கிழமை துருக்கியின் கிழக்கே இடம்பெற்ற 5.6 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வான் என்ற நகரில் ஒரு ஆறு-மாடி உணவு விடுதி உட்பட 25 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. 23 பேர் இடிபாடுகளிடையே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.


இதே பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர் அக்டோபர் 23 ஆம் நாள் 7.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சென்ற மாத நிலநடுக்கத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகளௌக்காக அங்கு சென்றிருந்த யப்பானிய மருத்துவர் ஒருவர் நேற்றைய நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டார் என துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


சேதமடைந்த பைராம் விடுதியில் இருந்த சில ஊடகவியலாளர்கள் தம்மைக் காப்பாற்றுமாறு குறுஞ்செய்திகளை தமது உறவினருக்கு அனுப்பியுள்ளனர்.


துருக்கி முக்கிய பிளவுப் பெயர்ச்சிக்கோட்டின் மேல் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். 1999-ல் துருக்கியின் வடமேற்குப் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 20,000 பேர் உயிரிழந்தனர். வான் பகுதியில் உள்ள கால்திரான் பகுதியில் 1976-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,840 பேர் உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]