தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 27, 2013

தெற்கு சூடானின் முக்கிய போராளிக் குழுவைச் சேர்ந்த சுமார் 3,000 போராளிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


தெற்கு சூடான் விடுதலை இராணுவத்தின் (SSLA) முன்னாள் போராளிகள் சூடானில் இருந்து நூற்றுக்கும் அதிகமான வாகனங்களில் எல்லையைக் கடந்து வந்தனர் என ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. தெற்கு சூடானின் போராளிகளுக்கு சூடான் உதவியளிக்கிறது என்ற குற்றச்சாட்டை எப்போதும் சூடான் மறுத்து வந்திருக்கிறது.


சரணடைந்து வரும் போராளிகளை தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் எப்போதும் மன்னித்தே வந்திருக்கிறார் என அந்நாட்டின் தகவற்துறை அமைச்சர் பர்னாபா பெஞ்சமின் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது தெற்கு சூடானின் இராணுவத்தில் உள்வாங்கப்படுகின்றனர்.


தெற்கு சூடானை ஆண்டு வரும் முன்னாள் போராளிக் குழுவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் செல்வாக்கு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகத் தாம் போராடுவதாக தெற்கு சூடான் விடுதலை இராணுவம் கூறுகிறது. தெற்கு சூடானின் இராணுவத்தினர் பெரும்பாலும் நாட்டின் டின்க்கா என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் நூயெர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தெற்கு சூடானின் இரண்டாவது பெரிய இனமாகும்.


தெற்கு சூடான் எண்ணெய் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அண்மைக் காலத்தில் மேம்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் பிரிந்ததை அடுத்து சூடானின் எண்ணெய் வளத்தின் பெரும் பகுதியை தெற்கு சூடான் தனதாக்கிக்கொண்டது. ஆனாலும், ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் எண்ணெய்க் குழாய்கள் சூடானுக்கூடாகவே செல்கின்றது.


மூலம்[தொகு]