உள்ளடக்கத்துக்குச் செல்

நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 25, 2011

இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய "மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்" (UARS) நேற்று ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது.


மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்

செயலிழந்த செயற்கைக்கோள் கிரீனிச் நேரப்படி 03:23 மணிக்கும் 05:09 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் (குறிப்பாக 04:16 மணியளவில்) வீழ்ந்துள்ளது. இத்தரவுகள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் இச்செயற்கைக்கோளின் சிதறுண்ட பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


கலிபோர்னியாவின் வாண்டென்பர்க் வான் படைத் தளத்தில் அமைந்துள்ள கூட்டு விண்வெளிக் கட்டளைப் பணியகத்தில் இருந்து இச்செயற்கைக்கோளின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டன.


செயற்கைக்கோளின் சில பகுதிகள் மேற்குக் கனடாவில் வீழ்ந்ததாக முன்னர் தகவல்கள் தெரிவித்தன. ஆனாலும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 3,525 கோடி ரூபாய் செலவில், கடந்த 1991 ஆம் ஆண்டு 6.5 தொன் எடையுள்ள இந்த மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோளை (Upper Atmosphere Research Satellite) ஏவியது. கடந்த 2005-ம் ஆண்டில் இந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. இந்நிலையில் சடுதியாக பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.


20-ஆண்டு காலப் பழமையான இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்துள் வந்து முழுமையாக எரிந்து விட்டது. ஆனாலும் எரிய முடியாத கிட்டத்தட்ட 500 கிகி பாகங்கள் பூமியில் வீழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது. அதேபோல 2001ம் ஆண்டு உருசியாவின் 135 தொன் எடை கொண்ட மீர் விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை உருசிய வி்ஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் விழ வைத்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]