உள்ளடக்கத்துக்குச் செல்

நிலவுக்கான புதிய ஆளில்லா விண்கலத்தை நாசா ஏவியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 7, 2013

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா தனது புதிய விண்கலம் ஒன்றை நிலவை நோக்கி ஏவியுள்ளது.


லாடீ விண்கலம்

லாடீ (LADEE) என்றழைக்கப்படும் இவ்விண்கலம் அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வாலொப்ஸ் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் நேரம் 23:27 அளவில் ஏவப்பட்டது. $280 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ்விண்கலம் சந்திரனைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை ஆராயும். அத்துடன் நிலவின் மேற்பரப்பில் இடைக்கிடை தோன்றும் நிலவுத்தூசு பற்றியும் இது ஆராயவுள்ளது.


கோள்களுக்கான தனது எதிர்காலத் திட்டங்களில் பயன்படுத்தவென நாசா திட்டமிட்டுள்ள புதிய லேசர் தகவற்தொடர்பு அமைப்பு ஒன்றையும் லாடீ சோதிக்கவுள்ளது.


சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லை என நினைத்திருப்பவர்கள் இத்திட்டம் குறித்து வியப்படையலாம் எனக் குறிப்பிட்டுள்ள இத்திட்டத்தின் வானியலாளர் சேரா நோபிள், "நிலவுக்கும் வளிமண்டலம் உள்ளது, ஆனால் அது மிக மிக மெலிதானது,” எனக் குறிப்பிட்டார். நிலவின் வளிமண்டலத்தில் மிகக்குறைந்த அளவு மூலக்கூறுகளே உள்ளன, இவையும் ஒன்றுக்கொன்று தொலைவில் உள்ளதால் அவை ஒன்றுடன் ஒன்று மோதித் தாக்கமடைவதில்லை.


“இது புறவளிமண்டலத்தைப் (exosphere) போன்றது. பூமிக்கும் புறவளிமண்டலம் உள்ளது. ஆனால் அது பன்னாட்டு விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் தூரத்தை விட வெளியில் உள்ளது. ஆனால் நிலவில் இத்தகைய புறவளிமண்டலம் அதன் மேற்பரப்பிலேயே காணப்படுகின்றது," எனக் கூறினார் சேரா நோபிள்.


லாடீ நிலவின் மேற்பரப்பில் இருந்து 20 கிமீ உயரத்தில் இருந்து தனது ஆய்வுகளை நடத்தும். இத்திட்டம் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். திட்ட முடிவில் நிலவின் மேற்பரப்புடன் அது மோதவிடப்படும்.


லாடீ (LADEE) என்பது Lunar Atmosphere and Dust Environment Explorer (நிலவின் வளிமண்டல மற்றும் தூசுச் சூழல் ஆய்வுக்கலம்) என்பதன் சுருக்கமாகும்.


மூலம்

[தொகு]